கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் கட்டணமின்றி மனுக்கள் எழுதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்களிடம் விரைவாக சென்று சேர்த்திடும் மிக முக்கியமான பொறுப்பினை அரசு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களின் மனுக்களை எவ்வித சிரமுமின்றி பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையிலேயே வழங்கி பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர், உங்களைத்தேடி உங்கள் ஊரில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் சென்று பெறுவதுடன் அம்மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்து உரிய கால அளவில் தகுதியான மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு நிறைவேற்ற இயலாத கோரிக்கை மனுக்கள் இருப்பின் அதற்கான காரணங்கள் குறித்து தொடர்புடைய மனுதாரருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. .
குறிப்பாக, திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக தற்பொழுது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் வருவாய்த்துறை மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு கட்டணமின்றி மனுக்கள் எழுதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியகரத்தில் பொதுமக்களால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு இதற்கான உரிய இரசீது வழங்கப்படுவதுடன், பொதுமக்களின் மனுக்களின் மீது தொடர்புடைய துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்துவரும் திங்கட்கிழமைக்கான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கவரும் பொதுமக்களுக்குக் கட்டணமின்றி மனுக்களைத் தொடர்ந்து எழுதி வழங்கும் சேவையினைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

-nckful1DAL.jpg )
