ட்ரெண்டிங்

 69 பயனாளிகளுக்கு ரூ.99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், மானத்தாள் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. 

இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் மக்கள் சந்திப்பு திட்டம் நடைபெறும் மானத்தாள் ஊராட்சியானது ஓமலூர் வட்டத்தில் உள்ள தாரமங்கலம் குறுவட்டத்தில் அமைந்துள்ளது. 

குறிப்பாக, மானத்தாள் ஊராட்சியில் உப்பாரப்பட்டி, ஓலைப்பட்டி, கங்காணிப்பட்டி, கரட்டூர், கிள்ளியூர், மானத்தாள், விஜயன் நகர், ஆசிரியர் காலனி, நாடார் காலனி உட்பட 25 குக்கிராமங்களை உள்ளடக்கிய 2,550 குடும்பங்கள் அடங்கிய 8,970 மக்கள் தொகை கொண்டதாகும். இக்குக்கிராமங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தனித்தனியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சரால் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி கற்றல் மூலம் சமூக வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் தனிமனித பொருளாதார வளர்ச்சியும் அடைய முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து தங்களது குழந்தைகளை குறைந்தபட்சம் உயர்க்கல்வி வரை முழுமையாக படிக்க வைப்பதை உறுதி செய்திட வேண்டும். 

மேலும், மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கல்விக்கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு கல்விக்கடன் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் தங்கள் அருகில் உள்ள வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம். 

மேலும், மானத்தாள் பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தினை அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்திட வேண்டியும், ஒலைப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர நூலகத்தினை முழு நேர நூலகமாக உயர்த்திட வேண்டியும் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன. 

அதேபோன்று, மானத்தாள் கிராமத்திற்கு என தனியாக அனைத்து வசதிகளுடன் விளையாட்டு மைதானம் மற்றும் சமுதாயக் கூடம் வேண்டியும் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன. குறிப்பாக, கூடக்கல்லானூர் பகுதியில் மயானம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் இதற்கான அளவீடு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதவிர வேறு கோரிக்கைகள் இருந்தாலும் அதனை பொதுமக்கள் தெரிவிக்கும்போது அதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும். 

மேலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் வருகின்ற மார்ச் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.சேலம் மாவட்டத்தில் வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் மூலம் 3,500 வீடுகள் பழுது பார்க்கப்பட்டுள்ளன.அதேபோன்று. அனைத்து ஊராட்சிப்பகுதிகளிலும் 31 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக, மானத்தாள் ஊராட்சியில் விளைவிக்கக்கூடும் பனைமரத்தில் இருந்து பெறப்படுகின்ற பனை வெல்லம் மற்றும் கருப்பட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கான சத்துமாவு தயாரிக்கும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வணிக ரீதியில் மேம்படுத்த விரும்புவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகும்போது தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகளின் மூலம் மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூபாய் 99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்டங்களை பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.