சேலம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதன் சார்புத் துறைகளின் முன்னோடித் திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜன.10) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். இத்தகைய திட்டங்களை வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் வேளாண்மை மற்றும் அதன் சார்புத் துறைகளின் முன்னோடித் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச் சான்றளிப்புத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்டத் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 1.004.4 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு 31 டிசம்பர் 2024 வரை 1,154.9 மி.மீ மழை பெய்துள்ளது. குறிப்பாக, இயல்பான மழையளவை விட கூடுதலாக இந்த ஆண்டு 150.5 மி.மீ மழை பெய்துள்ளது. இது 15 விழுக்காடு கூடுதல் மழையளவு ஆகும். அதேபோன்று, நவம்பர் மாதம் 2024 வரை 2,42,623 எக்டர் பரப்பளவில் நெல், பருத்தி, சோளம், கம்பு, இராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் மற்றும் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு,1,85,368.1 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் 180.020 மெ.டன், சிறுதானியங்கள் 97.994 மெ.டன், பயறு வகைகள் 117.643 மெ.டன், எண்ணெய் வித்துக்கள் 218.990 மெ.டன். பருத்தி 0.353 மெ.டன் என மொத்தம் 915 மெ.டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையகங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 4,586 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,355 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 4,860 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 4,858 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 16,669 மெட்ரிக் டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உரக்கடைகளில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்குதல், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் செயல்படுத்துதல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு, பண்ணைக் குட்டைகள் அமைத்தல், கிராம குளங்கள் மற்றும் ஊரணி சீரமைத்தல், பவர் டில்லர் மானியத்தில் வழங்குதல் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும். கால்நடைபராமரிப்புத் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம். நுண்ணீர் பாசனத்திட்டம், பயிர் காப்பீடு திட்டம் குறித்தும். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பொருளீட்டுக் கடன் குறித்தும், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறையின் சார்பில் விதைப் பண்ணை பதிவு செய்தல் விதை சுத்திகரிப்புப் பணிகள், விதைக்குவியல்கள் மற்றும் வயல்களில் ஆய்வு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்கும் பணியினை வேளாண்மை மற்றும் அதன் சார்புத் துறை அலுவலர்கள் முனைப்போடு மேற்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் குமரன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


