ட்ரெண்டிங்

 நிற்காமல் சென்ற காரை சேசிங் செய்து பிடித்த போலீசார்! 

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து ஓமலூர் வழியாக, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக ஓமலூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று (ஜன.04) அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், கார் நிற்காமல் சேலம் நோக்கி வேகமாகச் சென்றது. இதைத் தொடர்ந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர். இருப்பினும் காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் காரில் சோதனை செய்தனர்.

அப்போது காருக்குள் 66 மூட்டைகளில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவுச் செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.