ட்ரெண்டிங்

ஸ்கூல மூடாதீங்க ப்ளீஸ்.....காலில் விழுந்த எம்.எல்.ஏ.!


சேலம் பழைய சூரமங்கலத்தில் இயங்கி வரும் ஸ்ரீ இராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் 1- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 1,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  சுமார் 30 வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது. 

இந்த நிலையில், இப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று (டிச.23) காலை 10.00 மணியளவில் பள்ளியின் முன்பு திரண்டு, பள்ளியை மூடக்கூடாது என கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்ட எம்.எல்.ஏ. அருள்,  பள்ளி நிர்வாகியிடம், அம்மா வேணாம்மா உங்க கால்ல விழுந்து கேக்குறேன் ஸ்கூல மூடாதீங்க ப்ளீஸ்...என்று கூறியதுடன் காலில் விழுந்து கோரிக்கை வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இப்பள்ளியின் உரிமையாளர்கள், பள்ளியை விற்பனை செய்ததாகவும், இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.