ட்ரெண்டிங்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிடும் வகையில் நடவடிக்கை!

 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (அக்.25) நடைபெற்றது. 

 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இத்தகைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.

 

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 1.004.4 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு தற்போது வரை 816.2 மி.மீ மழை பெய்துள்ளது. வேளாண்மை சாகுபடியைப் பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் என செப்டம்பர் 2024 மாதம் முடிய 1,34,586.6 ஹெக்டர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

 

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனையகங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 3,786 மெட்ரிக் டன்னும், டிஏபி 1,834 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,730 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 7,639 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 14,989 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலர்கள் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும், சேலம் மாவட்டத்தில் 53.398 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 87.975 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும், 72.571 மெட்ரிக் டன் விதை பயறு வகைகளும், 16.349 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பழங்கள். காய்கறிகள், வாசனைத் திரவியங்கள், மலைப்பயிர்கள். மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்கள் 59,023.2 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

 

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைகள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 9,192.83 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 1,009 விவசாயிகள் மற்றும் 72,443 நுகர்வோர் பயனடைந்துள்ளனர். அதேபோன்று, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாரியாக வரத்து, வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பொருளீட்டுக்கடன் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

 

மேலும், குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுக்கூடு அறுவடை குறித்த மாதாந்திர முன்னேற்றங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைவாக அடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, விவசாயிகள் உரிய பிரீமியத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து மழை போன்ற இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.