தமிழ்நாடு முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் 31 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று (அக்.21) சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி அருள்மிகு இல்ட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலில் திருமண விழாவினை நடத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வியந்து பார்க்கும் வகையில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் இந்து அறநிலையத்துறையின் வாயிலாக இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான திருக்கோவில்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் 2024- 2025-ஆம் ஆண்டின் சட்டப்பேரவை அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் நடைபெறும் திருமண விழாவில் சென்னை மாவட்டத் திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கான திருமண விழாவினைத்
தலைமையேற்று இன்றையதினம் நடத்தி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்றையதினம் சேலம் மாவட்டத்தில் 18 இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலில் 10 இணைகளுக்கும், வாழப்பாடி வட்டம், பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் 8 இணைகளுக்கும் என 2 பகுதிகளுக்கும் சேர்த்து 18 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
இத்திருமண விழாவில் மணவாழ்வினைத் தொடங்கும் தம்பதியினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், புதுமண தம்பதியினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், கைக்கடிகாரம், பூஜை பொருட்கள், கட்டில், பீரோ, மெத்தை, மிக்ஸி மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசைகளுடன் திருமண விழா நடத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுமண தம்பதிகள் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வில் சிறந்து விளங்க மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


