ட்ரெண்டிங்

மாணவிகள் புத்தகங்களை அதிகளவில் படிக்க வேண்டும்! 


சேலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் கல்லூரி பேரவையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (செப்.27) தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, சேலம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 3,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் இதுபோன்ற கல்லூரி பேரவை தேர்தல்கள் நடத்துவது மிகவும் சவாலானதாகும்.கல்லூரி பேரவைக்கு தேர்தல் முறையில் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதால் பல நன்மைகள் உருவாகிறது.இதுபோன்ற கல்லூரி பேரவைகளில் பங்கேற்பதன் மூலம் நமக்கான தலைமைப் பண்பு தானாகவே வந்துவிடும். எந்த பணியையும் சுமையாக கருதாமல் எளிதாக எடுத்துக்கொண்டு அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

மாணவிகள் அனைவரும் அதிகளவிலான புத்தகங்கள் படிக்க வேண்டும். அவ்வாறு அதிக புத்தகங்களைப் படிப்பதால் நமது சிந்திக்கும் திறன், மனப்பக்குவம் போன்றவை தானாகவே அடுத்தகட்டத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும். அதேபோன்று, இது நமது சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.
கல்லூரி பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, மாணவிகள் இதுபோன்ற கல்லூரி பேரவைகளில் பங்கேற்று தங்களது தலைமைப் பண்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர்.காந்திமதி, தாவரவியல் துறைத்தலைவர் முனைவர்.விஜயகுமாரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.