சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க.வின் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 25) காலை 10.00 ,மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, மாவட்ட செயலாளர்கள் வெங்கடாஜலம், இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து பா.ஜ.க.வை அழைத்து நாணயம் வெளியீட்டு விழாவை தி.மு.க. நடத்தியது. இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களை தி.மு.க. ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை? இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க. என்டிஏ கூட்டணியை வைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வெளியே எதிர்ப்பது போல் இருந்தாலும் உள்ளே கூட்டணி வைத்திருக்கிறது.
அண்ணாமலை பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியமைத்துள்ளார்; மத்திய அரசு நாணயம் வெளியிட்டால் தான் புகழ் கிடைக்கும் என்பதுபோல அண்ணாமலை பேசுகிறார்; எம்.ஜி.ஆரின் வரலாறு தெரியாமல் அவரை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசுகிறார்.
உழைக்காமல் பதவிக்கு வந்த ஒரே தலைவர் அண்ணாமலை; அதை வைத்து தலைக்கால் புரியாமல் ஆடுகிறார். பா.ஜ.க. தலைவரான பின் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அண்ணாமலை என்ன செய்துள்ளார்? தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தர முடியவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.


