ட்ரெண்டிங்

வாக்கு எண்ணிக்கை- நுண் பார்வையாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை! 

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் (ஜூன் 04) நடைபெறவுள்ளதையொட்டி, தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப. மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜூன் 03) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணும் பணி நாளைய தினம் செவ்வாய்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்கப்படவுள்ளது. தேர்தல் நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டுள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதிக்கு பதிவான தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 6 மேஜைகள் அமைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் எண்ணப்படும். அதேபோன்று, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும்.

தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணுவதற்குகென அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு தேர்தல் நுண்பார்வையாளர் என சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் 117 தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் அதன் முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கும் பலகையில் ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகள் எழுதப்படுவதோடு அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குலுக்கள் முறையில் தலா 5 VVPAT தேர்வு செய்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியில் உள்ள Slip-கள் எண்ணும் பணி துவங்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.