தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஜூலை 31) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் நுகர்வோர் நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் சகாப்தத்தில் நுகர்வோர் பாதுகாப்பு என்ற கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் வணிக நோக்குடன் தெரிவிக்கப்படும் கருத்துகளை பகுப்பாய்வு செய்து, தங்களுக்குத் தேவையான தரமான பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருட்களை வாங்கும் முன்னர், அதன் தரம் மற்றும் விலை குறித்து தகவல்களைப் பெற வேண்டும்.
மேலும் பொருளை வாங்கியதற்கான இரசீது, உத்தரவாத அட்டை, கையேடு போன்றவைகள் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். குறிப்பாக, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளரின் சேவை மையம் இருப்பதை உறுதி செய்து சரியான பொருட்களை வாங்கும் அளவிற்கு நமக்கான
விழிப்புணர்வு அவசியமானதாகும்.
நுகர்வோர் நலன் சார்ந்து சிறப்பாகச் செயல்பட்ட நுகர்வோர் தன்னார்வலர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் மின் வணிகம் நாள்தோறும் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் அதிகளவில் அறிந்திருப்பது அவசியமானதாகும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, உணவு பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

-udvkUi8ihg.jpeg )
