சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட குமரகிரி ஏரியில் விரைவில் பரிசல் சவாரி தொடங்கப்பட உள்ள நிலையில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் சீ.பாலச்சந்தார் ஆகியோர் பரிசல் சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு வழிகாட்டுதல் படி, சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி, பள்ளப்பட்டி மற்றும் போடிநாயக்கன்பட்டி ஏரிகள் புதுப்பொழிவு பெற்று வருகின்றன. இந்த நிலையில் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரியை சுற்றுலாதளாமக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் குமரகிரி ஏரியில் பரிசலில் சவாரி செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
குமரகிரி ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்தப்பட்டு நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரி பகுதியை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அழகிய சூழலில் அமைந்துள்ள குமரகிரி ஏரியில் விரைவில் பரிசல் சவாரியும் தொடங்கப்படும் என மாண்புமிகு மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
குமரகிரி ஏரியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுற்றுப்புறச்சுவர்கள், முன்புற கதவுகள், ஏரியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 எம்.எல்.டி தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் பாலச்சந்தர் தெரிவித்தார். தற்போது ஆங்காங்கே மண் திட்டுகள் அமைத்து பறவைகள் சரணாலயம் தொடங்குவதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், கறைகளை சுற்றிலும் பதிக்கப்பட்டுள்ள கருங்கல் இடையே சிமெண்ட் கலவை பூச வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோட்டம் எண்.37-ல் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள கன்னிமார் ஒடையின் குறுக்கே சிறுபாலம் அமைய உள்ள இடத்தினையும், கோட்டம் எண். 39-ல் பெரிய கிணறு தெருவில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் காவலர் அறை மற்றும் முன்பக்க கதவுகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததில் உடனடியாக செய்து தரப்படும் என மேயர் ராமச்சந்திரன் கூறினார். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில் குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருஞானம், தெய்வலிங்கம், ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



-SXgDfGgJfO.jpg)