உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024- ல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட சேலம் கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (ஊரக தொழில்கள்) கூடுதல் இயக்குநர் (பொ) ரேஷ்மா முன்னிலையில் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூலை 06) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8- ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மாநில அளவில் ரூபாய் 63,573.11 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் மூலம் 124 நிறுவனங்கள் ரூபாய் 1,638.91 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட 124 நிறுவனங்களில் 80 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ரூபாய் 1,039.40 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்து 2,057 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்து 26 நிறுவனங்கள் ரூபாய் 347.6 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்து விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன. 6 நிறுவனங்கள் ரூபாய் 47.9
கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் 8 நிறுவனங்கள் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 113.13 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். 4 நிறுவனங்கள் ரூபாய் 90.88 கோடி மதிப்பீட்டில் நிலம் வாங்க உத்தேசித்துள்ளனர்.
மேலும், நிலுவை விண்ணப்பங்களை கண்காணித்து விரைவுபடுத்திட குழு அமைக்கப்பட்டு, பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நிலுவை விண்ணப்பங்களை கண்காணித்து ஒப்புதல்கள் வழங்க துரிதப்படுத்தப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் தொடங்கி நடத்திட தேவையான ஒப்புதல்கள், தடையில்லா சான்று (NOC), துறைசார்ந்த அனுமதிகள், புதுப்பித்தல், தொழில் உரிமம் இவற்றை எளிதாகப் பெற ஒற்றை சாளர இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் Tamil Nadu Business Facilitation Act, 2018- ல் குறிப்பிடப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய ஒப்புதல்கள் வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் திறன் வாய்ந்த படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ள காரணத்தாலும் தொழில் தொடங்க அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாலும் முதலீட்டாளர்கள் எவ்வித தயக்கமுமின்றி தொழில் தொடங்குவதுடன் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி தொழில் துறையில் சேலம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக வளர முதலீடு செய்யவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை ளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


