ட்ரெண்டிங்

ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தி வரும் குரங்கைப் பிடிக்க வனத்துறை தீவிரம்! 

சேலம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 100- க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு பகுதியிலிருந்து வந்து செல்கிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயிலில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில்,  கடந்த 20 நாட்களாக சேலம் ரயில் நிலையத்தில் குரங்கு ஒன்று ரயில் பயணிகளை அச்சுறுத்து வகையில் கடிக்கப் பாய்வது, கையில் வைத்திருக்கும் பேக்கை பிடுங்குவது, பொதுமக்களின் ஆடைகளை பிடித்து இழுப்பது,  தின்பண்டங்களை பிடுங்கி சாப்பிடுவது, ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில்  புகுந்து அங்கு இருக்கக்கூடிய உணவுப் பொருட்களை சூறையாடுவது என்ற பல்வேறு சேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ரயில் பயணிகள் ரயில்வே துறையினரிடம்  புகார் அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே துறையினர் கூறிய நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக ரயில் நிலையத்துக்குள் திடீர் என புகுந்த குரங்கு 4 மற்றும் 5- வது பிளாட்பாரத்தில் ரயிலில் இறங்கி வரும் ரயில் பயணிகள் மற்றும் பிளாட்பாரத்தில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் பைகளை பிடுங்குவது, ஆடைகளைப் பிடித்து இழுப்பது, தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு ஓடுவது ரயில் பயணிகளை கடிக்கும் வகையில் அச்சுறுத்துவது போன்ற சேட்டையில் ஈடுபட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் குரங்கை விரட்டினர். ஆனால் குரங்கு அங்கிருந்து செல்லாமல் ரயில்வே போலீசாருக்கு ஆட்டம் காட்டியது. இது குறித்து ரயில்வே துறையினர் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வனத்துறையினர் குழுவாக ரயில் நிலையத்திற்குள் குரங்கை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.