ட்ரெண்டிங்

பசுமை ஏற்காடு- சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்! 

பசுமை ஏற்காடு திட்டத்தின் கீழ். பிளாஸ்டிக் பயன்பாடற்ற ஏற்காட்டை உருவாக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப் பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான ஏற்காட்டின் இயற்கையை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் அதிக அளவிலான மரக்கன்றுகளை வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவு செய்திடவும், ஏற்காட்டின் சுற்றுச்சுழலை மேம்படுத்திடவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டினை அதிகரித்திடுதல், ஏற்காட்டில் உருவாகும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பசுமை ஏற்காடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதில் மாவட்ட ஆட்சியர் திட்டக்குழுவின் தலைவராகவும். மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆகியோர்களை செயலர்களாகவும். மகளிர் திட்ட இயக்குநர். மாவட்ட சுற்றுலா அலுவலர். வட்டாட்சியர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, ஏற்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி. உணவு விடுதிகள், கடைகள், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்துவதற்கு தேவையான கருத்துருக்களை தயாரித்து செயல்படுத்திட இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலும் தடைசெய்து, அதற்கான மாற்று பொருட்களான மஞ்சள் பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற
நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் ஊர்பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஏற்காட்டில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுலாத்துறை மூலமாக சுற்றுலாப்பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் இல்லாப் பொருட்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தேவைப்படும் இடங்களில் அதிகளவிலான குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், குப்பைத்தொட்டிகள் மற்றும் தூய்மையான கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தூய்மைப்பணிகளுக்கான விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்த்து மாற்றுப்பொருட்களை பயன்படுத்துதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்கி, ஏற்காட்டின் பசுமை சூழலை பாதுகாத்திட சுற்றுலாப்பயணிகள். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.