ட்ரெண்டிங்

வெள்ளி தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ. அருள்!

 

பா.ம.க.வின் சேலம் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருள் நாள்தோறும் பகுதி வாரியாக காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

 

இதன்படி, சேலம் மாநகராட்சியின் 25- வது வார்டுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் எம்.எல்.ஏ. அருள் இன்று (பிப்.10) நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது வெள்ளி தொழிலில் ஈடுபடும் கைவினைஞர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இத்தொழிலில் தற்போதைய சூழல் குறித்து கேட்டறிந்த அருள் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது, வெள்ளி தொழிலாளர்கள், தேர்தல் காலங்களில் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் வெள்ளி தொழிலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

 

இதனை கேட்டறிந்த எம்.எல்.ஏ. தேர்தல் காலங்களில் வெள்ளி தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை களைய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையிடுவதாக உறுதியளித்தார்.

 

இதனிடையே, ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பள்ளப்பட்டி ஏரி புதுப்பித்தல் பணியைக் கண்டித்து பா.ம.க. சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.