ட்ரெண்டிங்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- ஆட்சியர் ஆலோசனை! 

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப் பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்றையதினம் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகிறது என்பதால் வீட்டின் உள்ளே மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீர் மற்றும் தங்களின் சுற்றுப்புறத்தில் கிடக்கும் பழைய பயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றில் தேங்கும் மழை நீரில் இருந்தும் டெங்கு லார்வாக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பாக அமைகிறது.

தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, இம்முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. இதனைத்தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவாகக் காணப்படும் குழந்தைகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர் டெங்கு காய்ச்சலில் இருந்து கூடுதல் கவனத்துடன் இருந்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக் கடைகளில் காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளை தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும், சாதாரண சளி, காய்ச்சல் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள
மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தவா 20 நபர்களும், பேரூராட்சிகளுக்கு தலா 10 நபர்களும், நகராட்சிகளுக்கு தலா 30 நபர்களும் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 400 நபர்களும் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்புடைய பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு பணிகளான டெங்கு கொசு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடித்தல், கிருமி நாசினிகள் தூவுதல், குளோரினேசன் செய்யும் பணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவைக்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தவறாமல் சென்று ஆய்வு செய்து டெங்குகொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அவர்களின் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்குமாறு தேவையற்ற பொருட்கள் இருக்கின்றதா என்பதையும் முழுமையாக ஆய்வு செய்து அனைத்தையும் அப்புறப்படுத்திட

வேண்டும். சேலம் மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.