ட்ரெண்டிங்

சேலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி! 

சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சுமார் 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 

சேலம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.எம்.செல்வகணபதி, அ.தி.மு.க. சார்பில் விக்னேஷ், பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் மனோஜ் குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (ஜூன் 04) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். இந்த சூழலில், டி.எம்.செல்வகணபதி சுமார் 5,66,085 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். சுமார் 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ் தோல்வி அடைந்தார். 

குறிப்பாக, அ.தி.மு.க. வேட்பாளரைத் தவிர்த்து மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். சேலம் மக்களவைத் தொகுதியில் நோட்டாவிற்கு 14,894 வாக்குகள் பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.