ட்ரெண்டிங்

வாக்கு எண்ணிக்கை- சேலம் ஆட்சியர் ஆலோசனை! 

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., தலைமையில் இன்று (மே 28) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

பின்னர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணும் பணி வருகின்ற ஜூன் 04- ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 08.00 மணிக்கு துவங்கப்படவுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்றைய தினம் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதி, ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியதாகும். தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் எண்ணப்படும். மேலும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். மேலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒரு மேஜையும் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவற்ற பின்னர் அதன் முடிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கும் பலகையில் ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகள் எழுதப்படுவதோடு அதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்படும். குறைந்தபட்சம் 17 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 25 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குலுக்கள் முறையில் தலா 5 VVPAT தேர்வு செய்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவியில் (VVPAT) உள்ள Slip-கள் எண்ணும் பணி துவங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரின் சார்பில் வாக்கு எண்ணிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள முகவர்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

சேலம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும் அரசு பணியாளர்கள் என 1,500- க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுப்பட்டுத்தப்படவுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் கைப்பேசி, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் தடைசெய்யப்பட்டுள்ள எந்த பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கு அனுமதி இல்லை. 

வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வித வாகனமும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, வருகின்ற ஜூன் 04- ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பணியாற்றிட வேண்டும்." இவ்வாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.