ட்ரெண்டிங்

47- வது ஏற்காடு கோடை விழா தொடங்கியது! 

47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் அபூர்வா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி ஆகியோர் இன்று (மே 22) மதியம் 02.00 மணிக்கு தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டனர்.

கரகாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், கேரளா செண்டை மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அண்ணா பூங்காவில் நடைபெற்றன. வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு வியந்தனர்.

அண்ணா பூங்காவில் 30,000 பூந்தொட்டிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டேலியா உள்ளிட்ட 25 வகையான மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. 7 லட்சம் மலர்களைக் கொண்டு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காய்கறி மற்றும் பழங்களால் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.