ட்ரெண்டிங்

சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு ஆய்வு! 

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவினை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 15) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கான பயிற்சி நடைபெற்ற மையங்களில் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதேபோல், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்கள் கடந்த ஏப்ரல் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் தங்களது வாக்கினைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினைச் செலுத்தும் வகையில் இன்றைய தினம் சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாக்குச்சாவடி மையத்தில் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினைச் செலுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே, தங்களது தபால் வாக்கினைச் செலுத்தாத வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களும் இன்றையதினம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி தங்களது தபால் வாக்கினைச் செலுத்திடும் வகையில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தங்களது தபால் வாக்குகளை இதுவரை செலுத்தாமல் உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கும் சேலம் குகை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் இன்றையதினம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடும் வகையிலும், வாக்குப்பதிவு நடைமுறைகளை வீடியோ ஒளிப்பதிவு செய்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், தனித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் தாமோதிரன் உள்ளிட்டத் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.