ட்ரெண்டிங்

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்....- ஆட்சியர் எச்சரிக்கை! 

சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி. இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (மே 17) நடைபெற்றது. 

கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பிருந்தாதேவி இ.ஆ.ப., சாலை விபத்துக்களை முற்றிலும் குறைத்து விபத்தில்லா பயணத்தை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் காவல்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்டு, கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்துக்களின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் நாள்களில் சாலை விபத்து இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மனித உயிர்களின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிதல், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து காவல்துறை. நெடுஞ்சாலைத் துறை. போக்குவரத்துத் துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் தனி கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும். பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் ஏற்காட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெரிவித்துள்ளபடி, ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் முறையான ஆய்வு மேற்கொண்ட பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகளவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.