ட்ரெண்டிங்

தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்- ஆட்சியர் அறிவுறுத்

12- ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சியானது சேலம் மாவட்டம் ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (மே 08) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள். போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும். தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி இத்தருணத்தில் நடத்தப்படுவது மாணவ, மாணவியர்களுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பயின்ற 22,805 மாணவர்கள் கல்லூரி கனவு நிகழ்ச்சி வாயிலாக பயனடைந்துள்ளனர். மேலும், இத்திட்டத்தின் மூலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் பொறியியல், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்ற 82,837 மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றையதினம் 160 அரசு பள்ளிகளில் இருந்து 1,450 மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இம்மேடையில் அமர்ந்துள்ள நான் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்களும் உங்களைப்போன்று அரசுப்பள்ளியில் பயின்று தொடர்ச்சியாக போட்டித்தேர்வுகளில் முயன்று வெற்றிபெற்று இந்நிலையை எட்டியுள்ளோம். மனஉறுதியுடன் கவன சிதறல் இன்றி இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சித்தால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் அனைவரும் உங்கள் முன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம்.

குறிப்பாக எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முன்னேறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவ, மாணவியர்கள் தங்களது திறன்களை எவ்வாறு மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை துறை வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கின்றனர்.

மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் உயர்கல்வி படிப்பிற்கான இச்சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சியினை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.