ட்ரெண்டிங்

குடிநீர் விநியோகம்- அலுவலர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்! 

சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஏப்ரல் 29) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கோடை வெப்பம் அதிகரித்துவரும் இச்சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிச் செய்திடும் வகையில் வாரந்தோறும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்த வாரம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு அலுவலர்கள் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 189.18 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களின் 60 வார்டுகளில் உள்ள 9.66 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனி குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்டம் ஆகிய காவிரி குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் 130 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் ரூபாய் 149.11 கோடி மதிப்பீட்டில் 1,37,841 குடிநீர் இணைப்புகள் வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இதுவரை 1,10,646 குடிநீர் வழங்கப்பட்டு மீதமுள்ள குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், ஜல் ஜீவன் திட்டம், மாநில சேமிப்புத் திட்டம், மாவட்ட சேமிப்புத் திட்டம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும், ஊரக பகுதிகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும். குடிநீர் அளவினை 10 லிட்டரில் இருந்து 55 லிட்டர் ஆக உயர்த்தி வழங்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பிலுள்ள 5 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 342.41 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் ராசிபுரம் எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காவேரிபுரம் மற்றும் 11 ஊராட்சிகளில் உள்ள 140 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிவுற்று தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. மீதமுள்ள திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று, ரூபாய் 652.84 கோடி மதிப்பீட்டில், ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் ஆகிய 4 இளம்பிள்ளை, பேரூராட்சிகள், இடங்கணசாலை நகராட்சி மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்ட ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 53.23 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் 5.23 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் ரூபாய் 30.58 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் நீர் ஒதுக்கீட்டில் இருந்து ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு நாள்தோறும் 1.827 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் 28,000 மக்கள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று, ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் ஏற்காடு ஊராட்சிக்குட்பட்ட 8 குடியிருப்புகளுக்கான புதிய குடிநீர் திட்டம் 16,000 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஏதேனும் குடிநீர் இணைப்புகள் பழுதடைந்தால் குடிநீர் விநியோகத்திற்கு எவ்வித தங்கு தடையும் இல்லாமல் பழுதடைந்த குடிநீர் இணைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை காலம் என்பதால் குடிநீர் தொடர்பான புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் அதன்மீது உடனடி நடவடிக்கைகளை தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களுக்குத் தேவையான சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.