ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியினை சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 16) மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்துப் பங்கேற்றார்.

சேலம் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்த படியே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதேபோன்று, வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக வாக்களிக்க வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தள வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சக்கர நாற்காலி மற்றும் அதனை இயக்குபவருடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றையதினம் சேலம், மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து 50-க்கும் மேற்பட்ட செவித்திறன் மற்றும் பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியில் மாற்றுத்திறனாளிகள். ரோட்டரி சங்க நிருவாகிகள் கலந்துகொண்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அனைத்துத் தரப்பினரும் தங்களது வாக்கினைப் பதிவு செய்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. முன்னிலையில், சைகை மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்களித்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள், பொதுமக்கள். மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் 100 சதவிகிதம் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.