ட்ரெண்டிங்

மக்களவைத் தேர்தல் பணி - மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆலோசனை! 

மக்களவைப் பொதுத்தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி. இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஏப்ரல் 15) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வை குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள், கணக்கு சரிபார்ப்பு குழுக்கள், உதவி செலவின மேற்பார்வைக்குழுக்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றன.

கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்கள் இரு திசைகளிலும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவேண்டும்.

கண்காணிப்புக் குழு ஒரு வாகனத்தை சோதனை செய்யும் பொழுது அக்குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் பிரிந்து அடுத்தடுத்து வரும் வாகனங்களையும் சோதனை மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். புகார்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவித்தவுடன் தொடர்புடைய இடங்களுக்கு விரைந்து செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.