ட்ரெண்டிங்

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி நடைபெறும் மையங்களில் இன்று (ஏப்ரல் 13) மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி 3,260 வாக்குச்சாவடி மையங்கள் அமையப்பெறவுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 13,410 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக மாற்று அலுவலர்கள் 2,682 பேர் என மொத்தம் 16,092 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சியானது சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24- ஆம் தேதி அன்றும், இரண்டாம் கட்ட பயிற்சியானது ஏப்ரல் 07- ஆம் தேதி அன்றும் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட 11 இடங்களில் அமையப்பெற்றுள்ள பயிற்சி மையங்களில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மறுபயிற்சி இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. மறுபயிற்சி நடைபெறும் மையங்களில் ஒன்றான சோனா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சிக்கனம்பட்டி, ஏ.வி.எஸ் கல்லூரியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்றைய தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இன்றைய தினம் இரண்டாம் கட்ட மறுபயிற்சியில் கலந்து கொண்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெறும் மையங்களிலேயே தபால் வாக்குகள் பதிவு செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தங்களது தபால் வாக்கினை செலுத்தியுள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட மற்றும் இறுதிகட்ட பயிற்சியானது வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.