ட்ரெண்டிங்

பூத் சிலிப் வழங்கும் பணி ஆய்வு! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 13) சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசகாரனூர் பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 14,56,299 ஆண் வாக்காளர்கள். 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 இதர வாக்காளர்கள் ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியில் 78.97 சதவீத வாக்குகளும், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 77.97 சதவீதம் வாக்குப்பதிவுகளும் நடைபெற்றது.

வாக்காளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்குப்பதிவினை வாக்குச்சாவடிகளுக்கு சென்று எளிதாக வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கிடும் வகையில் ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கிடும் வகையில் பணி நடைபெற்று வருகிறது.


சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியானது நேற்றைய தினம் (ஏப்ரல் 12) வரை 83.39 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.இப்பணியினை இன்று 13.04.2024-க்குள் வழங்கி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பூத் சிலிப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. இவ்வாக்காளர் கையேட்டில் வாக்காளர் தங்களது தகவல்களை சரிபார்க்கவும். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளவும், பூத் சிலிப் வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது என்பது குறித்தும், தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அடையாளச் சான்றாக பயன்படுத்தி வாக்களிக்களாம் என்பது குறித்தும், வாக்களிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வருவது குறித்து இன்றைய தினம் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசகாரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி இ.ஆ.ப. வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்புகளை விடுபடாமல் இன்றைய தினத்திற்குள் வழங்கி முடித்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், தனித் துணை ஆட்சியருமான (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.