ட்ரெண்டிங்

இவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் குப்பைத் தொட்டியில்....- ஜி.கே.வாசன் எம்.பி. பேச்சு! 

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்குகள் குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நேற்று (ஏப்ரல் 12) சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 

தீவட்டிப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன் எம்.பி. பேசுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத அரசு நடக்கிறது. அனைத்து தரப்பு மக்கள் மீதும் வரி சுமையை தி.மு.க. அரசு ஏற்றி வைத்துள்ளது. மின்சார வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றை உயரத்தியதே வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அளித்த பரிசு. இனி மக்கள் அளிக்கும் வாக்கு வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்காத வகையில் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகள் செய்ய வேண்டும். காவிரி உபரிநீர் திட்ட பணிகள் முறையாக விரிவுப்படுத்த வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

சேலம்- ஓமலூர் சாலையில் அமைந்துள்ள காலாவதியான சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். பல்வேறு மத்திய அரசின் தொழில்களுக்கு உயிர் கொடுத்து வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். சேலத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா உருவாக்கப்படும். மலைவாழ் மக்களுக்கு மேலும் நிதி உதவிகள் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தின் வருங்கால வளர்ச்சிக்கு தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மறந்துக் கூட வாக்களித்து விடாதீர்கள்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வுக்கும் அளிக்கும் வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமமானது.. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் பா.ஜ.க.வை எதிர்க்கட்சியாக பார்க்காமல் எதிரி கட்சி போல பார்ப்பார்கள். பிரதமரையோ மத்திய அமைச்சர்களையோ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நேரில் சந்திக்க கூட தி.மு.க. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயங்குவார்கள் என தே.மு.தி.க, அ.தி.மு.க. வேட்பாளர்களை புறம் தள்ள வேண்டும்.

நல்லவர்கள் எல்லாம் ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். இந்த கூட்டணி 2026- ல் தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி அமைக்கும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தலுக்கு பிறகு நாடு வல்லரசாகும். நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பொருளாதாரம் மேலும் உயரும் என்றார்.