ட்ரெண்டிங்

தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கண்காணிக்கும் பணியில் அலுவலர்கள்! 

சேலம் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்னர் மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் சான்றுப் பெற்று வெளியிட வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. மக்களவைப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் செலவினங்களைக் கண்காணித்துக் வேட்பாளர்களின் கணக்கிட்டு, தேர்தல் விளம்பரத் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் தொலைக்காட்சிகள் மற்றும் உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளைக் கண்காணிப்பதற்கும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான செய்திகளோ அல்லது அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகின்றதா என்பது குறித்தும் இக்குழு கண்காணிப்புப் பணியினை மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள். வேட்பாளர்கள், அவரைச் சார்ந்தோர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், எப்.எம் ரேடியோக்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன் அவ்விளம்பரத்தினை மாவட்ட ஆட்சியாக தரை தளத்தில் அறை எண் 8-இல் இயங்கிவரும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்களில் வெளியிட விரும்புவோர் உரிய படிவத்துடன் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் விளம்பரம் வெளியிடுவதற்கு பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் 3 நாட்களுக்கு முன்னதாகவும், பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியினர் 7 நாட்களுக்கு முன்னதாகவும் விண்ணப்பிக்க ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சான்றிதழ் பெறப்பெற்ற விளம்பரங்கள் மட்டுமே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள், எப்.எம். ரேடியோக்களில் வெளியிட வேண்டும். இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.