ட்ரெண்டிங்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வுப் பேரணி! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணியினை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 09) சேலம் பேர்லேண்ட்ஸ் காவல்நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். 

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதேபோன்று, வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக வாக்களிக்க வருகைதரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தள வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சக்கர நாற்காலி மற்றும் அதனை இயக்குபவருடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றையதினம் சேலம், பேர்லேண்ட்ஸ் காவல் நிலையம் அருகில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பேரணியானது, சேலம், பேர்லேண்ட்ஸ் காவல் நிலையம் அருகில் தொடங்கி ஐந்து ரோடு வழியாக மீண்டும் காவல் நிலையம் சென்றடைந்தது. இப்பேரணியில் மாற்றுத்திறனாளிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்குப்பதிவிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் தங்களது வாக்குப்பதிவினை 100 சதவிகிதம் செலுத்திட உரிய நடவடிக்கைகள் இதுபோன்ற விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.