ட்ரெண்டிங்

மூத்த குடிமக்கள் தபால் வாக்களிப்பதை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஏப்ரல் 06) சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, நைனாம்பட்டி பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வருகிற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தனது வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதற்கென வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 12 D விண்ணப்ப படிவத்துடன் தொடர்புடையவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 24- ஆம் தேதி வரை பெறப்பட்டது.

அந்தவகையில், சேலம் மக்களவைத் தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் படிவம் 12 டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள நபர்களின் வீட்டிற்கே சென்று தபால் வாக்குப்பதிவு செய்திட நேற்றைய தினம் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 06 மற்றும் ஏப்ரல் 08 ஆகிய மூன்று நாட்கள் தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தெரிவிக்கப்படும் நாளில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, இரண்டாம் நாளான இன்றையதினம் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, நைனாம்பட்டி பகுதிகளில் உள்ள 85 வயதான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்தே வாக்களிப்பதையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வ செய்தார்.

முன்னதாக மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்திற்கு வரப்பெற்ற கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட சரிபார்ப்புப்பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரக தேர்தல் இருப்பறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவசுப்பிரமணியன், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) முருகேசன். சேலம் தெற்கு வட்டாட்சியர் செல்வராஜ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.