ட்ரெண்டிங்

தி.மு.க. மாநாட்டில் டிரோன்களின் வர்ணஜாலம்!

 

தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஜன.20) சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ளது. 

 

இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் சேலத்திற்கும் தனி விமானம் மூலம் இன்று வருகை தந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் அளித்த மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதனையடுத்து, சேலம் விமான நிலையத்தில் இருந்து தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு, தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, தி.மு.க. மாநில மாநாட்டினையொட்டி சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சுடர் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு, மாநாட்டில் முகப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் ஏற்றப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் 1,000 பேர் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமேடையில் அமர்ந்து பார்வையிட்டார். கைகளை அசைத்து அவர் இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினர். தி.மு.க. கொடியான கருப்பு சிவப்பு வண்ணத்தில் உடையணிந்த நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக மாநாட்டுத் திடலை சுற்றி வந்தனர்.

 

பின்னர், திராவிட இயக்க வரலாறு மற்றும் தி.மு.க. வரலாற்றை விவரிக்கும் வகையில் நடைபெற்ற ட்ரோன் ஷோவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

1,500 ட்ரோன்கள் வானத்தில் பச்சைக்கம்பளம் விரித்தால் போல ஒளிக்காட்சி தொடங்கியது. ட்ரோன்கள் ஒளிக்காட்சியின் பின்னணியில் திராவிட இயக்கம் மற்றும் தி.மு.க.வின் வரலாறு ஒலித்தது.முதலாவதாக வானுயரத்தில் தந்தை பெரியார் கைத்தடி ஏந்திய படி நிற்கும் உருவமும், அதனையடுத்து, பேரறிஞர் அண்ணா புத்தகம் படித்தபடி இருக்கும் உருவமும் காட்சிப்படுத்தப்பட்டது.

 

தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன், தமிழ்நாடு வரைப்படம், மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வரலாறும் விவரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உருவம் ட்ரோன்களின் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டது. தி.மு.க. கொடியை ஏந்தி செல்லும் இளைஞரணி நிர்வாகியின் உருவத்தையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் வடிவம் ஒற்றை விரலைக் காட்சி பேசும் காட்சி வடிவத்தில் அமைக்கப்பட்டது. இதனையடுத்து ஒற்றைச் செங்கலைகாட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட காட்சி, இளைஞர் அணி மாநாட்டிற்கு வரவேற்கும் தி.மு.க. கொடி ஏந்திய உருவ வடிவமைப்பு, தமிழ் வெல்லும் என கலைஞரின் கையெழுத்து பேனா வடிவத்துடன் என பல்வேறு வடிவங்கள் ட்ரோன்கள் ஒளிக்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. மொத்தம் 12 நிமிட நேரம் வானத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 10 வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

 

இந்நிகழ்வினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தனி மேடையில் இருந்தபடி பார்வையிட்டனர். முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், பேரன் இன்பநிதி உள்ளிட்டோரும் ட்ரோன் ஒளிக்காட்சியை பார்வையிட்டனர்.

 

தி.மு.க. இளைஞரணி மாநாட்டினையொட்டி சேலம் மாவட்டத்தில் 8,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.