ட்ரெண்டிங்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தேர்தல் விழிப்புணர்வுப் பேரணியினை இன்று (ஏப்ரல் 03) சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல்நிலையம் அருகில் தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம் முழுவதும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றையதினம் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் அருகில் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனித சங்கிலி பேரணியினைத் தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் விநாயகா மிஷன் கல்லூரியைச் சேர்ந்த 200- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திலிருந்து உள்ளூர் தெருக்கள் வழியாக வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பேரணியின்போது, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. வழங்கினார். 

இந்நிகழ்வில், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் இயக்குநர் மரு.பி.செந்தில்குமார். சேலம் தெற்கு வட்டாட்சியர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.