ட்ரெண்டிங்

சௌமியா அன்புமணி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றிக் கூட்டம் நடத்திய தருமபுரி மக்களவைத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 27- ஆம் தேதி சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் பா.ம.க.வின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தருமபுரி பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணியை அறிமுகம் செய்து வைத்து வாக்குச் சேகரித்தார். இந்த நிலையில், திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக சௌமியா அன்புமணி, பா.ம.க.வின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட 11 பேர் மீது மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்தனர்.