ட்ரெண்டிங்

அவருக்கே தண்ணீர் காட்டியவன் நான்- வேட்பாளர் அண்ணாதுரை பேட்டி! 

சேலம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் அண்ணாதுரை, இன்று (மார்ச் 27) கட்சி நிர்வாகிகள் புடைச்சூழ சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைத் தந்தார். எனினும், குறிப்பிட்ட தொலைவைத் தாண்டி 50- க்கும் மேற்பட்ட பா.ம.க.வினரை காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் தடுத்தனர். 

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அண்ணாதுரை தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் தாக்கல் செய்தார். அத்துடன், உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், அ.ம.மு.க. பொருளாளர் எஸ்.கே.செல்வம், பா.ஜ.க.வின் சேலம் தொகுதியின் பொறுப்பாளர் அண்ணாதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் உலகநம்பி ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் அண்ணாதுரை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், நிச்சயமாக வெற்றி பெறுவேன்; தான் வெற்றி பெற்றால் சேலத்தில் எம்.பி. என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவேன்; சேலத்தில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன். 

தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் பணத்தை நம்பி களத்தில் இருக்கிறார்கள். ஆனால் நான் பொதுமக்களை நம்பி இருக்கிறேன். கடந்த காலங்களில் சட்டமன்ற தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணி காட்டும் வகையில் தான் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவன் நான். அவருக்கே தண்ணீர் காட்டிய எனக்கு நாடாளுமன்ற தேர்தல் பெரும் பொருட்டல்ல என்பது குறிப்பிடத்தக்கது.