ட்ரெண்டிங்

தேர்வு மையத்தினை நேரில் பார்வையிட்ட சேலம் ஆட்சியர்! 


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கியுள்ள நிலையில், சேலம் மணக்காடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) முதல் ஏப்ரல் 08- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு பயிலும் 22,089 மாணவர்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 பேர் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக, 895 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் உதவியுடன் (Scribe) தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 184 தேர்வு மையங்களில் இப்பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

அந்த வகையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தான் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதியினை ஏற்பாடு செய்திடவும். தேர்வர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திடவும். தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடுவதை உறுதி செய்திடும் வகையில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தலையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என மொத்தம் 3,000- க்கும் மேற்பட்டோர் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.