எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்?- யுவராஜா விளக்கம்!
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அறிவித்திருந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அ..தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் யுவராஜா சந்தித்துப் பேசியிருந்தது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள யுவராஜா, கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.
தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


