ட்ரெண்டிங்

நெருங்கும் மக்களவைத் தேர்தல்... வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

நெருங்கும் மக்களவைத் தேர்தல்... வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் அதிரடி ஆய்வு!

2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (பிப்.20) காலை 11.00 மணிக்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேலம் நாடாளுமன்ற தேர்தல் 2024 வாக்குப் பதிவு முடிவுற்றபின், வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைப்பதற்கும். பதிவான வாக்குகளை எண்ணுவதற்கும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து வாக்கு எண்ணும் மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், வாக்குப் பெட்டிகள் இருப்பு அறைகளுக்கான பாதுகாப்பு வசதிகள். வாக்குப் பெட்டிகள் வைப்பு இருப்பு அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வருவதற்கான தனி பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல், தபால் வாக்குகள் இருப்பு வைப்பதற்கான அறைகளில் தேவையான பாதுகாப்பு வசதிகள், மின்சார வசதிகள், வாக்கு எண்ணும் இடங்களில் தேவையான தடுப்பு வேலிகள் அமைத்தல், வாக்கு எண்ணுவதற்குத் தேவையான மேசைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து
அடிப்படை வசதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் பிருந்தாதேவி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா, இ.கா.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவசுப்ரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.