ட்ரெண்டிங்

அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு! 

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சேலம் ரயில்வே ஜங்ஷன் செல்லும் சாலையில் அமைந்துள்ள சோனா கல்வி குழும வளாகத்தில் உள்ள தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 05) காலை 09.00 மணிக்கு தொடங்கியது. 

முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், காப்பீடு, வங்கிச் சேவைகள், மருத்துவம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர். அதேபோல், சேலம் மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 500- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். 

வேலைவாய்ப்பு முகாமிற்காக சிறப்பு பேருந்துகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டது. பிற்பகல் 03.00 மணி வரை நடைபெற்ற முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பணி நியமன அணைகள் வழங்கப்பட்டன. 

இந்த முகாமில், வேலை வாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லதா, மாவட்ட தொழில் மைய மேலாளர் சிவக்குமார் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டனர். 

சேலம் மாவட்டத்தைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் 16- ஆம் தேதி எடப்பாடியிலும், வரும் அக்டோபர் மாதம் 18- ஆம் தேதி ஆத்தூரிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.