ட்ரெண்டிங்

திட்டப் பணிகளைத் தரமாகவும், உரிய கால அளவிலும்...- அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!

சேலம் மாவட்டம், வீரபாண்டி, மகுடஞ்சாவடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ரூபாய் 5.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (பிப்.13) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இன்றைய தினம் வீரபாண்டி, மகுடஞ்சாவடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், சத்துணவுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கனவுப் பள்ளி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம். 15வது நிதிக் குழு மானியத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட ரூபாய் 5.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், மூடுதுறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 8.15 லட்சம் மதிப்பில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் பணியினை ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கான ஊதியம் முறையாக அவர்களது வங்கிக் கணக்குகளில் குறித்த காலத்தில் வரவு வைக்கப்படுவது குறித்தும், ஒவ்வொரு
நாளும் முடிக்கப்படவேண்டிய பணியின் அளவுகள் சரியான அளவில் முடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் தங்கள் பகுதியின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், பெருமாம்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.40 லட்சம் மதிப்பில் தொகுப்பு வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், கனவுப் பள்ளி திட்டத்தின் கீழ், முருங்கப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூபாய் 5.26 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் என வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 1.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம். 15வது நிதிக் குழு மானியத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ரூபாய் 2.24 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ரூபாய் 1.35 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் என ஆக மொத்தம் ரூபாய் 5.45 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு இப்பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் (பொ) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி, சுகந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.