ட்ரெண்டிங்

கலைச் செயல்பாடுகள் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும்- சேலம் ஆட்சியர் பேச்சு!

 

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா ஓமலூர் அருகேயுள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில் இன்று (பிப்.10) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி பேசியதாவது, "கல்வி பயிலும் காலகட்டங்களிலேயே தங்களின் தனித்திறன்களை ஒவ்வொரு மாணவர்கள் வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாடு அரசால் இத்தகைய கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய கலைச் செயல்பாடுகள், குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரக் கூடிய சூழலை உருவாக்குவதோடு, பிற கற்றல் செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது.

இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்கு பிடித்த கலையைக் கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது" என்றார்.

 

சேலம் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற 458 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 63 மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இது தவிர மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 180 பள்ளிகளைச் சார்ந்த 1,306 மாணவ, மாணவிகளுக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.