ட்ரெண்டிங்

காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மூட்டைகள்- 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை! 

சேலம் மாவட்டம், மணியனூர் பகுதியில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சின்னதங்கம் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஆகஸ்ட் 04) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே காரில் சிலர் வந்தனர். காவல்துறையினரைப் பார்த்த அவர்கள், காரை நிறுத்தி விட்டு, தப்பியோட முயன்றனர். 

அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதில், முன்னுக்கு பின் முரணாகக் கூறியதால், காரை முழுவதும் சோதனையிட்டனர். அதில், தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருந்ததைப் பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து, கார் ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் சுமார் 4.72 லட்சம் மதிப்பிலான 472 கிலோ குட்காவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களை அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 25) என்பதும், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கரண்குமார் (வயது 24) என்பதும் தெரிய வந்தது. அதேபோல், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து குட்கா கடத்திக் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.