ட்ரெண்டிங்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கிய ஆட்சியர் கார்மேகம்!

 

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நேற்று (ஜன.22) நடைபெற்றது.

 

 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, "ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 374 மனுக்கள் வரப்பெற்றன.

 

மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 18 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் எவ்வித காலதாமதமும் இல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக தீர்வுக் காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்றைய தினம் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 132 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.