ட்ரெண்டிங்

ஆடிப்பெருக்கையொட்டி, உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் அமோக விற்பனை! 

சேலம் மாநகராட்சி பகுதியில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் நான்கு உழவர் சந்தைகளும், மாவட்டத்திற்குட்பட்ட ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய இடங்களில் 7 உழவர் சந்தைகளும் என மொத்தம் 11 உழவர் சந்தைகள் உள்ளனர். 

இந்த உழவர் சந்தைகளில் பண்டிகை நாட்கள் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விஷேச நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாகி வருகிறது. 

அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 03) ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்ததால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, பூஜைக்கு தேவையான தேங்காய், பழங்கள், பூக்கள் வாழை இலைகள், பூசணிக்காய் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகியுள்ளது. 

நேற்று ஒரேநாளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த வரத்து 213.582 டன் ஆகும். இதனை சுமார் 50,000- க்கும் மேற்பட்டோர் வாங்கிச் சென்றதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஒரேநாளில் ரூபாய் 87.98 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாகியுள்ளது. இந்த தகவலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.