ட்ரெண்டிங்

மார்கழியில் வாசலில் போடும் மாக்கோலம் எதற்காக?

 

அதிகாலையில் விழித்தெழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து பல வண்ணப்பொடிகளைக் கொண்டு போடுவது, பின்னர் வாசனை மலர்கள் தொடுப்பது என தமிழ் பெண்களின் வழக்கம், தமிழக வரலாற்றின் அடையாளம். ஆனால் தற்போது அவை அனைத்தும் மாறிவிட்டது என்பதைவிட, மறந்தே போய்விட்டது என்பதே நிதர்சனம்.

மறந்துப் போன நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அவ்வப்போது நினைவுப்படுத்த சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அப்படி சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இளம் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பிட்ட நேரத்தில் வர்ணக் கலப்பு ஏதுமின்றி புள்ளி வைத்து, நெளி கோலமிடுதல் போட்டியாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் தரையில் இட்ட கோலங்கள் தமிழ் பாரம்பரியத்தை நினைவுக்கூறும் விதமாய் அமைந்தனர். அதிகாலையில் எழுந்து கோலமிடுதலில் ஆரோக்கியம் அடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர் முந்தைய தலைமுறையினர்.

இது குறித்து மீனாட்சி என்பவர் கூறுகையில், மாக்கோலம் இடுவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்; குனிந்து கோலம் போடுவதால் பெண்களின் சிற்றிடை அழகு பெறும். பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

நல்ல சேர்க்கையே ஒழுக்கத்தை வளர்க்கும் என்பதற்கு உதாரணமாய் பூ தொடுப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டது. வாசனைமிக்க வண்ண வண்ண மலர்களை வாசலில் குவித்து நார் கொண்டு தொடுக்கும் வழக்கம், தற்போது கிராமங்களில் கூட பார்க்க முடிவதில்லை. அதனை மீட்டெடுக்கவே இதுப்போன்ற நிகழ்ச்சிகளின் நோக்கமாக உள்ளதாகக் கூறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பானுமதி கூறுகையில், கோலத்திற்கு புள்ளி வைப்பது, பூ தொடுப்பதும் மனதை ஒரு நிலைப்படுத்தும் எனத் தெரிவித்தார்.

மாக்கோலமிடுதல், மலர் தொடுத்தல் போன்றவை பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல. இக்கால இளம்பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்கவும் தான்.