ட்ரெண்டிங்

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாணவிகளுக்கு அழைப்பு!

 

அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 4,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சலக வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

 

மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்கள், வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.