ட்ரெண்டிங்

கேக் சாப்பிட்ட இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

 

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிகளவு கேக் சாப்பிட்ட இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பராசக்தி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 23), பால் வண்டியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். அப்போது, தீவிர சிகிச்சை பெற்று, உடல்நிலைத் தேறினார்.

 

எனினும், அவ்வப்போது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. அதற்காக நந்தகுமார், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்த சூழலில், புத்தாண்டையொட்டி நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, நந்தகுமார் சாப்பிட்டுள்ளார். அத்துடன் அசைவ உணவும் எடுத்துக் கொண்டுள்ளார். மீண்டும் கேக் சாப்பிட்டு உறங்கியுள்ளார்.

 

நள்ளிரவில் நந்தகுமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, அவரது உறவினர்கள் உடனடியாக அவரை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இது குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.