ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சென்னைக்கு 3.50 டன் பால் பவுடர்கள் அனுப்பி வைப்பு!

 

சென்னையில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக 3- வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஏழாவது லாரி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று (டிச.07) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் "மிக்ஜாம்" புயல் சீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

அந்தவகையில், சேலம் மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் 3.50 டன் பால் பவுடர்கள், 70,000 பிஸ்கட் பாக்கெட், 55.000 குடிநீர் பாட்டில்கள், 25,000 பால் பாக்கெட், 15,000 பிரெட் மற்றும் பன் பாக்கெட், 1,000 ஜூஸ் பாக்கெட் அரிசி, ரவை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய 500 தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், மெழுகுவர்த்திகள், துண்டுகள், தீப்பெட்டிகள், போர்வைகள், நாப்கின்கள், லுங்கிகள், நைட்டிகள். பேஸ்ட், பிரஷ் உள்ளிட்ட நிவாரணத் தொகுப்புகள் சேலம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் அட்டைப் பெட்டிகளில் முறையாக அடுக்கி அனுப்பும் பணி இரவு பகலாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னையில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக 3வது நாளாக நிவாரணப் பொருட்கள் அடங்கிய ஏழாவது லாரி மாவட்ட ஆட்சியரால் இன்று வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கு ஏற்ப சென்னைக்கு நிவாரணப் பொருட்களை சேலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மாவட்ட ஆட்சியருடன் இணைந்து இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கீதா பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியினை இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.