ட்ரெண்டிங்

வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வெங்காயச் சந்தையில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் பூண்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வெங்காயச் சந்தைக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

ஆனால் அந்த மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால், வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மழை தொடர்வதால்  மேலும் 10 ரூபாய் அதிகரித்து கிலோ 70 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேபோல், சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.